அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ! - TPV24
இது திருப்பாவையின் 24-வது பாசுரம். மிகவும் விசேஷமானதும் கூட.
கண்ணா! உனக்கே மங்களம் உண்டாகுக!
குறிஞ்சி ராகம், கண்டசாபு தாளம்
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி*
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி*
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி*
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி*
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்*
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
பொருளுரை:
மகாபலி உலகங்களையெல்லாம் தன் கட்டுக்குள் வைத்திருந்த அக்காலத்தில், உன் திருவடிகளால் உலகங்களை அளந்து, அவற்றை அவனிடமிருந்து இரந்து பெற்றவனே ! உன் திருவடிகள் வாழியே !
தென் இலங்கைக்கு வானரப் படையெடுத்துச் சென்று, இராவணனையும் அசுர கூட்டத்தையும் அழித்தவனே ! உன் வலிமையும், திறமையும் வாழியே !
வண்டிச் சக்கர வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து அழித்தவனே ! உன் கீர்த்தி வாழியே !
கன்றின் உருவெடுத்து வந்த வத்சாசுரனை எறிதடியாக்கி, விளாங்கனி மர வடிவில் நின்ற கபித்தாசுரன் மீது வீசியெறிந்து, அவ்விரு அரக்கர்களையும் ஒரு சேர மாய்த்தவனே ! உன் திருவடிக் கழல்கள் வாழியே !
கோவர்த்தன மலையை குடை போல் தூக்கி நிறுத்தி, தேவேந்திரன் உண்டாக்கிய பெருமழையிலிருந்து ஆயர்பாடி மக்களைக் காத்தவனே ! உன் குணம் வாழியே !
பகைவர்களை வென்று அழிக்கின்ற, உன் கையிலுள்ள வேலாயுதம் வாழியே !
இது போல, சதாசர்வ காலமும் உன் பெருமைகளையும், கல்யாண குணங்களையும் போற்றிப் பாடி, உனக்குச் சேவகம் செய்து, வணங்கி வழிபட நாங்கள் இங்கு வந்துள்ளோம். நோன்புக்கான பறையை உன்னிடம் வேண்டிப் பெற வந்துள்ள எங்கள் மீது மனம் இரங்குவாயாக !
பாசுர விசேஷம்:
கோபியர்கள் கண்ணன் மேல் வைத்திருக்கும் வாத்சல்யமும், பரம பக்தியும், அவர்கள் 'பல்லாண்டு' பாடுவதில் வெளிப்படுகின்றன.
ஆண்டாள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாயிற்றே! அதனால் தான், அவளது ஆச்சார்யனுமான தந்தையின் பல்லாண்டுக்கு நிகராக, துயிலெழுந்து மணிமண்டபத்தில் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் கண்ணபிரானுக்கு பக்திப் பரவசமாக மங்களாசாசனம் செய்கிறாள்!
பரமனுக்கு அடியவர் பல்லாண்டு பாடவேண்டிய அவசியம் என்ன ? அவனே சர்வலோக ரட்சகன். அவனுக்கு எல்லா மங்களமும் உண்டாக வேண்டுமென்று (சிறியரான) அடியவர் பாடுவது எதனால் ? அது சரியா ? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில். அடியவருக்கு பரமன் மீதுள்ள பேரன்பின் வெளிப்பாடே இந்த பல்லாண்டு பாடுதல். வைணவத்திலுள்ள சிறப்பே இந்த மங்களாசாசனம் தான். சிறியவரும் பெரியோரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தலாம்!
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி*
ஆண்டாளின் த்ரிவிக்ரம அவதாரம் குறித்த பிரேமை நாம் அறிந்தது தான் :) இப்பாசுரத்தை மூன்றடி மண் கேட்ட பரமனின் திருவடியைப் போற்றி ஆண்டாள் ஆரம்பிக்கிறாள்.
இப்பாசுரம் தவிர, திருப்பாவையில் இன்னும் இரண்டு இடங்களில் வாமன அவதாரம் பற்றி வருகிறது. "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்று 3-வது பாசுரத்திலும், "அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்று 17-வது பாசுரத்திலும் ! அதாவது, மகாபலியிடம் மூன்றடி மண் கேட்ட த்ரிவிக்ரமனை, ஆண்டாள் மூன்று பாசுர அடிகளில் போற்றிப் பாடியுள்ளார் !!!
பரமனின் திருவடித் தடமானது, அவன் உலகங்களை அளந்த காரணத்தாலே, நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதால், அவன் திருவடி நிழலே, சரணாகதிக்குரிய ஒரே இருப்பிடம் என்பதை பாசுரத்தின் முதலடியிலேயே நமக்கு புரிய வைக்கிறாள் சூடிக் கொடுத்த நாச்சியார்!
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி*
ராவணனை, வானரப் படையை உருவாக்கி, கடலில் பாலம் அமைத்து, அவனது இருப்பிடமான இலங்கைக்கே சென்று வென்றதால், ராமனின் திறல் (வலிமை/திறமை) போற்றப்பட்டது!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி*
"பொன்றச் சகடம்" உதைத்தபோது, புகழ் போற்றி விட்டு, "கன்று குணிலா எறிந்தபோது" கோதை நாச்சியார் கழலைப் போற்றியது எதனால்? கன்று வடிவில் வந்த அரக்கனை தடியாகக் கொண்டு, கண்ணன் நின்ற இடத்திலேயே சுழன்று (ஒலிம்பிக்ஸில் hammer throw போல!) வீசி எறிந்தபோது, ஒரு காலை நிலத்தில் இருத்தி, மற்றதை சற்றே தூக்கி நின்ற கோலத்தில், கண்ணனது தாமரைப் பாதமும் கழலும் பளிச்சென்று கண்ணில் பட, கழல் போற்றப்பட்டது !!!
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி*
"குன்றைக் குடையாக எடுத்து" பெருமழையிலிருந்து ஆயர்களைக் காத்தபோது, கண்ணனின் (இந்திரனை அழிக்கப்புகாமல் பொறுத்த!) பெருந்தன்மையுடனான கருணையை, "குணம் போற்றி" என்றாள் ஆண்டாள்!
கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி கண்ணன் நின்ற கோலத்தை பெரியாழ்வார், பத்து பாசுரங்களில் மிக அற்புதமாக மங்களாசாசனம் செய்துள்ளார். ஒரு பாசுரத்தில் அக்காட்சி, ஆதிசேஷன் பூமியைத் தாங்கி நிற்பது போல் இருப்பதாகப் பாடுகிறார்.
படங்கள் பலவும் உடைப்பாம்பரையன்*
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்*
தடங்கை விரலைந்தும் மலர வைத்துத்*
தாமோதரன் தாங்கு தடவரைதான்*
அடங்கச்சென்று இலங்கையை ஈடழித்த*
அனுமன் புகழ் பாடித் தம்குட்டன்களை*
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*
அப்பதிகத்தில் இருந்து மற்றொரு அழகிய பாசுரத்தைப் பார்ப்போம்:
செப்பாடுடைய திருமாலவன் தன்*
செந்தாமரைக் கைவிரலைந்தினையும்*
கப்பாகமடுத்து மணிநெடுந்தோள்*
காம்பாகக் கொடுத்துக் கவித்தமலை*
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி*
இலங்கு மணி முத்து வடம்பிறழ*
குப்பாயமென நின்று காட்சிதரும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி*
பகைவர்களை அழிப்பதற்கு முதன்மைக் கருவியாக இருப்பதால், பரமன் கைவேல் போற்றப்பட்டது. அடியவர்களைக் காக்கவும், தீமையை அழிக்க வேண்டியிருக்கிறதே, அப்பரமனுக்கு, பல சமயங்களில்! அதோடு, கண்ணன் "கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனின்" மைந்தன் அல்லவா :-)
"படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!" என்ற விஷ்ணுசித்தரின் மங்களாசாசனத்தை நினைவு கூர்க!
இப்படி, ஒவ்வொரு போற்றுதலிலும், ஒரு அழகான பொருள் உள்ளது, இப்பாசுரத்தில்!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்*
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
முத்தாய்ப்பாக, "இனி எப்போதும் உனக்கு சேவை செய்வதே நாங்கள் வேண்டுவது, வேறு எதுவுமே எங்களுக்குத் தேவையில்லை, கண்ணா! எங்களிடம் மனம் இரங்கலாகாதா?" என்று கோபியர் இறைஞ்சுவதாக ஆண்டாள் பாடும்போது, கருணை வடிவான அப்பரமன் இனிமேலும் அருள் வழங்காமல் இருக்கத் தான் முடியுமா? ஆண்டாளின் பெரும்பக்தியே பாசுர நயமாக வெளிப்படுகிறது!
இது அல்லவோ ஆத்மார்த்தமான பல்லாண்டு பாடுதல், ஊழியஞ்செய்தல், சரண் புகுதல்!
பாசுர உள்ளுரை:
1. கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் மகன் என்பதாலேயே, கண்ணனுக்கு வேல் (வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி) உளதாயிற்று.
2. கோபியர்கள் மாயக் கண்ணனை, "அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி" என்று ஆறு வகையாய் (தங்கள் நாவால்) மங்களாசாசனம் செய்து அறுசுவை பெறுகின்றனர் !
இப்பாசுரத்தில் பரமனுக்கு ஆறு முறை மங்களாசாசனம் (போற்றி) செய்யப்படுகிறது. அவை பரமனின் ஆறு (ஞானம், வலிமை, செல்வம், வீர்யம், பொலிவு, செயல்திறன்) கல்யாண குணங்களைக் குறிப்பில் உணர்த்துவதாம்.
3. "என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்" என்பது, அடியார்களான கோபியர், பரமபதத்தில் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டுவதை மட்டுமே விழைவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !
4. "வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி" என்பது மோட்ச சித்தியை அடைவதற்குத் தடையாக இருப்பனவற்றை பரந்தாமனின் கூரிய சங்கல்பம் உடைத்தெறியும் என்பதை உட்கருத்தாக வலியுறுத்துகிறது !
5. "குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி" என்று கோபியர் பாடும்போது, பரமபதத்தில் ஸ்ரீவைகுந்தனாக, அனைத்துலகங்களையும் ரட்சிக்கும் சர்வேஸ்வரனாக, வெண்கொற்றக் குடையின் கீழ் எழுந்தருளியிருக்கும், பரந்தாமனின் கல்யாண குணங்கள் போற்றப்பட்டுள்ளன.
6. "கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்பது, பாவ-புண்ய பலன்களிலிருந்து அடியார்களை மீட்க வல்ல, பரந்தாமனின் வலிமை வாய்ந்த தண்டத்தைப் போற்றும் உட்குறிப்பாகும் !
7. "பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி" என்பது, புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் மனத்தை, பரந்தாமனைப் பற்றுவதன் மூலம் அமைதிபடுத்தி நல்வழிக்கு இட்டுச் செல்லும் உபாயத்தை உட்கருத்தாக வலியுறுத்துகிறது.
8. 'சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி' என்பது, எங்கும் நீக்கமற நிறைந்த அந்தர்யாமியாகவும், ஆச்சார்யனாகவும் இருக்கும் அம்மாயப்பிரானை, அவன் திருவடிப் பதம் அடைவதற்கு தடைக்கற்களாக இருக்கும் கர்வம், பற்று போன்றவற்றை விட்டொழிக்கத் தேவையான வலிமையான விவேகத்தை தந்தருளுமாறு கோபியர் வேண்டுவதைக் குறிக்கின்றது !
9. "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" --- உலகங்களைப் படைத்து ரட்சிப்பதால் பரந்தாமனே பரந்த இவ்வண்டத்தின் நாயகன், அவன் திருவடிகளே காப்பு !
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 278 ***
11 மறுமொழிகள்:
Test comment !
அருமையான விளக்கங்கள் பாலா. நன்றி.
குமரன்,
//அருமையான விளக்கங்கள் பாலா. நன்றி.
//
தன்யனானேன் சுவாமி :)
சென்ற பாசுரத்திற்கு 'சுருக்கமான' விளக்கம் அளித்து விட்டேன் என்றதால், கொஞ்சம் 'பெரிய' விளக்கமாய் எழுதினேன் !!!
மூன்றடி மண் கேட்டவனை
மூன்றடிகளில் சொல்லிய ஆண்டாள் திறத்தை என்னென்று சொல்வது!
பாலா
இன்னொன்று கவனித்தீர்களா? முதலில் திருவடிகள் திறத்தைப் புகழ்ந்து விட்டுப் பின்னர் தான் திருக்கரங்களின் திறமையைப் போற்றுகின்றார்கள்!
அடி போற்றி, உதைத்தாய் என்று சொல்லித் தான், எறிந்தாய், எடுத்தாய் என்கிறார்கள்!
படங்கள் அருமை பாலா, எங்கிருந்து??
எனக்கு மிகவும் பிடித்த பாசுரங்களில் ஒன்று. நன்றி பாலா.
அன்று அப்படி
ஆண்ட அவன்
ஆண்டவன் ஆனான்.
இப்போ இங்கு
ஆளும் அவன் ஆகி
ஆள்பவன் ஆக வேண்டும்
அவர் ஓய்வெடுத்தது
போதும் உடனே
உலகுக்கு வரவேண்டும்.
ஆட்சியைத் தொடங்க
வேண்டும்.
நன்றி, கண்ணபிரான் !
//முதலில் திருவடிகள் திறத்தைப் புகழ்ந்து விட்டுப் பின்னர் தான் திருக்கரங்களின் திறமையைப் போற்றுகின்றார்கள்!
//
அவன் திருவடிகளே காப்பு !
//படங்கள் அருமை பாலா, எங்கிருந்து??
//
விவரம் தனி மடலில் :)
நன்றி, கொத்ஸ், Anonymous, CT !
எ.அ.பாலா
test !
//சிறியவரும் பெரியோரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தலாம்//
இதை தானே ரொம்ப முன்னமே சொன்னோம். நீர் "இன்னுமோர் நூற்றாண்டு இரும்"
//திருவடி நிழலே, சரணாகதிக்குரிய ஒரே இருப்பிடம் என்பதை பாசுரத்தின் முதலடியிலேயே நமக்கு புரிய வைக்கிறாள் சூடிக் கொடுத்த நாச்சியார்!//
கோதை த கிரேட்
பெரியாழ்வார் பாசுரங்களை இணைத்தது அருமை
பாசுர உள்ளுரையாக சொன்ன விசயம் அனைத்தும் உணர்ந்து போற்றபட வேண்டியவை.
நன்றி
அருமை.
Post a Comment